வேல்பாண்டி

வேல் உண்டு வினையில்லை.

Tuesday, March 26, 2013

கொங்குதேர் வாழ்க்கை

More than a Blog Aggregator


பாடல் 


கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.

பாடல் தரும் பொருள்

நிகழிடம் - நூல் பதிப்பில் உள்ளபடி

இயற்கைப்புணர்ச்சி புணர்ந்தவழித் தலைமகளை இயற்கைப் புணர்ச்சிக்கண் இடையீடு பட்டு நின்ற தலைமகன், நாணின் நீங்குதற் பொருட்டு, மெய்தொட்டுப் பயிறல் முதலாயின அவள்மாட்டு நிகழ்த்திப் பாடுமாற்றாற், கூடிய தனது அன்பு தோற்ற நலம் பாராட்டியது.

நிகழிடம் - விளக்கம்

தலைவன் தலைவி முதல் உடலுறவு தற்செயலாக நிகழ்ந்து முடிந்தது. இது இயற்கைப் புணர்ச்சி. இது மீண்டும் நிகழும் காலம் தடைபட்டது. பின்னும் ஒரு சூழல் வாய்த்தது. அப்போது தலைவி தலைவனின் முகத்தைப் பார்க்கக் கூசி நாணத்தால் விலகி நிற்கிறாள். அவளது நாணத்தைப் போக்க அவளது உடம்பைத் தொட ஒரு பொய்ச்சாக்குச் சொல்வதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. இதில் தன் அன்பின் மிகுதியால் தலைவியின் நலத்தைப் பாராட்டிப் பேசுகிறான்.
(திருக்குறளில் நலம்புனைந்துரைத்தல் அதிகாரத்தில் உள்ள பாடல்களைப் போன்றது இது.)

செய்தி

தலைவி சூடியுள்ள பூவில் மொய்க்கும் தும்பி என்னும் வண்டைப் பார்த்து நீ அறிந்த பூக்களில் என் தலைவியின் கூந்தலைக் காட்டிலும் நல்ல மணமுள்ள பூவை அறிந்ததுண்டா? என்று வினவிக்கொண்டே அவளது உச்சியை முகர்கிறான். (அவள் நாணம் நீங்குகிறது. உறவு மலர்கிறது.)
தேன் தேடும் வாழ்க்கை கொண்ட அழகிய சிறகுகளை உடைய தும்பியே! தேன் உன்னும் காம ஆசையால் சொல்லாமல் உண்மையாக நீ கண்டதைச் சொல். இவள் என்னிடம் பயின்றதைக் கெழுதகை நட்பாகக் கொண்டவள். அவளும், அவள் கூந்தலும் மயிலின் இயல்பைக் கொண்டவை. அவற்றைக் காட்டிலும் நல்ல மணமுள்ள பூக்கள் இருக்கின்றனவா? - என்கிறான்.

முறிமேனி முத்தம் முறுவல் வேறிநாற்றம் வேலுண்கண் வேய்தோள் இவட்கு - என்று பாராட்டும் திருக்குறள் போன்றது இது.

கதை

இறையனார் என்னும் புலவரைக் கடவுள்-சிவபெருமான் என்று ஆக்கி, அரசன் அவையில் பரிசு பெறத் தருமி எனபவனுக்கு இப்பாடலைச் சிவபெருமான் எழுதிக் கொடுத்தார் என்னும் கதையாக்கித் திருவிளையாடற் புராணம் வடித்துள்ளது. புறப்பாடல் திரட்டு என்னும் நூலும் (15ஆம் நூற்றாண்டு) இந்தக் கதைக்குத் துணையாக அமைந்துள்ளது. 'திருவிளையாடல்' என்னும் திரைப்படத்தில் இந்தக் கதை சுவையேற்றப்பட்டுள்ளது.



0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home