பூசணிக்காய் பாட்டியம்மா
நான் இப்போது ஒரு கதை சொல்ல போகிறேன்
இந்த கதை உங்கள் பங்களிப்பு மிக மிக அவசியம்.
கதை நடுவே நான் பாடும் போது நீங்களும் கூட சேர்ந்து பாடணும். சரியா?
முன்பு ஒரு காலத்தில் ஒரு மிகவும் வயதான பாட்டியம்மா இருந்தாள்.
அவள் ஒரு மலையின் அடியில் உள்ள வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தாள்.
அந்த மலையின் உச்சியில் ஒரு வீட்டில் அவள் மகள் வாழ்ந்து வந்தாள்.
மகள் ஒரு எல்லா வகையான உணவையும் சுவையாக, ருசியாக சமைப்பாள்.
பாட்டியம்மா, அடிக்கடி மலை உச்சிக்கு சென்று, மகள் சமைக்கும் ருசியான சாப்பாட்டை சாப்பிட்டு மகிழ்ந்து வந்தாள்.
ஒருநாள் பாட்டியம்மாவுக்கு பசித்தது. அவள் வீட்டில் உணவு இல்லை.
உடனே அவள் மலையின் உச்சியில் உள்ள அவள் மகள் வீட்டுக்கு போக எண்ணினாள்.
ஏனென்றால் அங்கே போனால் மகள் வாய்க்கு ருசியாக உணவும், குடிக்க பாணமும் கொடுப்பாள்.
அதனால் தன் வீட்டை பூட்டிவிட்டு, பாட்டி தன் ஊன்றுகோலை கையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.
மலையில் நடக்கும் போது பாட்டி இப்படி பாடிக்கொண்டே போனாள்.
பாட்டு....
வாரா வாரா பாட்டியம்மா காட்டு வழியிலே..
கைத்தடிய கொண்டு நடத்து வாரா மேட்டு வழியிலே..
பாட்டியம்மா. அப்படி பாடி பாடி, நடந்து நடந்து மலை மேலே ஏற, வழியிலே ஒரு உருவத்தை கண்டாள். அதற்கு நீளமான காது இருந்தது.
நீண்ட அடர்த்தியான முடியுடன் கூடிய வால் இருந்தது. முகத்தில் இருந்து நீண்ட மூக்கு இருந்தது.
அது ஊ ஊ... என்று ஊளையிட்டது.
அது ஒரு ஓநாய்.
பாட்டியம்மா கிட்ட ஓநாய், "ஏ பாட்டி! எனக்கு ரொம்ப பசிக்குது. நல்லவேளை நீ என் கிட்ட மாட்டிகிட்டே. நான் உன்னை சாப்பிட போறேன்" என்றது.
அதற்கு பயத்தை மறைத்து கொண்டு பாட்டி " ஹா ஹா ஹா! அட என் செல்ல ஓநாயே!, என்னை பார். நான் மெலிந்து போய் இருக்கிறேன், என் உடலில் எலும்பு தோலும் தான் இப்போது உள்ளது.
ஆனால் நான் மலையின் உச்சியில் உள்ள என் மகள் வீட்டுக்கு போய் கொண்டு இருக்கிறேன். அவள் எனக்கு நன்றாக, ருசியாக விருந்து உணவு கொடுப்பாள்.
அதை எல்லாம் நான் நல்லா சாப்பிட்டு திரும்பி வரும்போது, நல்ல குண்டா, கொழு கொழுன்னு வருவேன். அப்போது நீ என்னை சாப்பிடலாமே " என்று கூறினாள்.
அதற்கு ஓநாய் "ஊ ஊ.. சரியாக சொன்னாய் பாட்டி, நீ திரும்பி வரும் போது நான் உன்னை சாப்பிட்டு கொள்கிறேன். அதுவரை நான் இங்கேயே காத்து இருப்பேன் " என்றது.
பாட்டி ஓநாயிடம் விடை பெற்று மேலே நடந்தாள். பாடிக்கொண்டே போனாள்
பாட்டு....
வாரா வாரா பாட்டியம்மா காட்டு வழியிலே..
கைத்தடிய கொண்டு நடத்து வாரா மேட்டு வழியிலே..
பாட்டியம்மா. அப்படி பாடி பாடி, நடந்து நடந்து மலை மேலே ஏற, வழியிலே மீண்டும் ஒரு உருவத்தை கண்டாள். அது மிக பெரியதாக இருந்தது. கரிய நிறத்தில் இருந்தது.
அது ஓ ஓ என்று அலறியது
அது ஒரு கரடி.
பாட்டியம்மா கிட்ட கரடி, "ஏ பாட்டி! எனக்கு ரொம்ப பசிக்குது. நல்லவேளை நீ என் கிட்ட மாட்டிகிட்டே. நான் உன்னை சாப்பிட போறேன்" என்றது.
அதற்கு பாட்டி " ஹா ஹா ஹா! அட என் கரடியே!, என்னை பார். நான் மெலிந்து போய் இருக்கிறேன், என் உடலில் எலும்பு தோலும் தான் இப்போது உள்ளது.
ஆனால் நான் மலையின் உச்சியில் உள்ள என் மகள் வீட்டுக்கு போய் கொண்டு இருக்கிறேன். அவள் எனக்கு நன்றாக, ருசியாக விருந்து உணவு கொடுப்பாள்.
அதை எல்லாம் நான் நல்லா சாப்பிட்டு திரும்பி வரும்போது, நல்ல குண்டா, கொழு கொழுன்னு வருவேன். அப்போது நீ என்னை சாப்பிடலாமே " என்று கூறினாள்.
அதற்கு கரடி " ஓ ஓ.. சரியாக சொன்னாய் பாட்டி, நீ திரும்பி வரும் போது நான் உன்னை சாப்பிட்டு கொள்கிறேன். " என்றது.
பாட்டி கரடியிடம் விடை பெற்று மேலே நடந்தாள். பாடிக்கொண்டே போனாள்
பாட்டு....
வாரா வாரா பாட்டியம்மா காட்டு வழியிலே..
கைத்தடிய கொண்டு நடத்து வாரா மேட்டு வழியிலே..
பாட்டியம்மா. அப்படி பாடி பாடி, நடந்து நடந்து மலை மேலே ஏற, வழியிலே மீண்டும் ஒரு உருவத்தை கண்டாள். அதன் உடம்பில் வரி வரியாக இருந்தது.
அது மஞ்சள் நிறத்தில் இருத்தது. முகத்தில் மீசை முடி இருந்தது,
அது ஒரு புலி.
புலி "வோ .. " என்று உறுமியது.
பாட்டியம்மா கிட்ட புலி, "ஏ பாட்டி! எனக்கு ரொம்ப பசிக்குது. நல்லவேளை நீ என் கிட்ட மாட்டிகிட்டே. நான் உன்னை சாப்பிட போறேன்" என்றது.
அதற்கு பாட்டி " ஹா ஹா ஹா! அட அழகான புலியே!, என்னை பார். நான் மெலிந்து போய் இருக்கிறேன், என் உடலில் எலும்பு தோலும் தான் இப்போது உள்ளது.
ஆனால் நான் மலையின் உச்சியில் உள்ள என் மகள் வீட்டுக்கு போய் கொண்டு இருக்கிறேன். அவள் எனக்கு நன்றாக, ருசியாக விருந்து உணவு கொடுப்பாள்.
அதை எல்லாம் நான் நல்லா சாப்பிட்டு திரும்பி வரும்போது, நல்ல குண்டா, கொழு கொழுன்னு வருவேன். அப்போது நீ என்னை சாப்பிடலாமே " என்று கூறினாள்.
அதற்கு புலி " ஓ ஓ.. சரியாக சொன்னாய் பாட்டி, நீ திரும்பி வரும் போது நான் உன்னை சாப்பிட்டு கொள்கிறேன். " என்றது.
பாட்டி புலியிடம் விடை பெற்று மேலே நடந்தாள். பாடிக்கொண்டே போனாள்
பாட்டு....
வாரா வாரா பாட்டியம்மா காட்டு வழியிலே..
கைத்தடிய கொண்டு நடத்து வாரா மேட்டு வழியிலே..
பாட்டி மலையின் உச்சியில் உள்ள அவள் மகள் வீட்டை அடைந்தாள்.
பாட்டியை பார்த்த மகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றாள்.
மகள் சொன்னாள், "அம்மா. உனக்காக வகைவகையான உணவு செய்து வைத்திருக்கிறேன்.
உங்களுக்காக, பிரியாணி செய்து வைத்திருக்கிறேன். பிறகு இன்னும், burger, spring roll,
எல்லாம் செய்து வைத்து இருக்கிறேன். அதுக்கு மேலே, உங்களுக்கு மிகவும் பிடிச்ச பூசணிக்காய் சூப் செய்து வைத்து இருக்கிறேன். " என்றாள்
பாட்டியும் அங்கே உட்கார்ந்து, எல்லா உணவையும் ஆசை தீர சாப்பிட்டாள், சாப்பிட்டாள், சாப்பிட்டு முடித்தாள்.
பின் பூசணிக்காய் சூப்பையும் குடித்து முடித்தாள்.
---
வயிறு முட்ட சாப்பிட்ட பாட்டியம்மா, "சரி நான் என் வீட்டு போகிறேன்" என்று எழுந்தாள்.
அப்போது வழியில் மூன்று மிருகங்கள் தன்னை சாப்பிட காத்து கொண்டு இருப்பது பாட்டியின் நினைவுக்கு வந்தது. அதை மகளிடம் கூறினாள். தான் அந்த மிருகங்களிடம் இருந்து தப்ப வழி கேட்டாள்.
மகள் சிறிது நேரம் யோசித்தாள். பின் சமையலறையில் இருந்து ஒரு பெரிய பூசணிக்காயை கொண்டு வந்தாள். அது மிக மிக பெரிய பூசணிக்காய். அதன் மேல் ஓட்டை போட்டு, உள்ளே உள்ளதை சுரண்டி எடுத்தாள்.
பின் பாட்டியை பூசணிக்காய்க்குள் போகுமாறு கூறினாள். சிறிது சிரமத்துக்கு பின் பாட்டி தன் கைத்தடியுடன் பூசணிக்காய்க்குள் போனாள்.
பாட்டியின் மகள் பெரிய ஒட்டையை மெழுகால் அடைத்து, பாட்டி மூச்சி விடுவதற்கு சிறிய ஓட்டை போட்டாள். பின் பூசணிக்காயை வாசலுக்கு கொண்டு போய் அங்கே இருந்து பாதையில் உருட்டி விட்டாள்.
பூசணிக்காய் உருண்டு போனது, முதலில் இருந்த புலி பூசணிக்காயை தடுத்து நிறுத்தியது.
புலி "என்ன இது, பார்க்க பூசணிக்காய் மாதிரி இருக்குது, ஆனால் பாட்டியம்மாவின் வாசம் வருகிறதே" என்று சொன்னது.
பூசணிக்காய் உள்ளே இருந்த பாட்டி, "இல்லை இல்லை, நான் பூசணிக்காய்தான், வீட்டுக்கு உருண்டு போய் கொண்டு இருக்கிறேன்" என்றாள்.
மீண்டும் முகர்ந்து பார்த்த புலி, "சரி பூசணிக்காயே, போய் வா" என்று உருட்டி விட்டது.
பூசணிக்காய் உருண்டு போனது, இந்த முறை கரடி பூசணிக்காயை தடுத்து நிறுத்தியது.
கரடி "என்ன இது, பார்க்க பூசணிக்காய் மாதிரி இருக்குது, ஆனால் பாட்டியம்மாவின் வாசம் வருகிறதே" என்று சொன்னது.
பூசணிக்காய் உள்ளே இருந்த பாட்டி, "இல்லை இல்லை, நான் பூசணிக்காய்தான், வீட்டுக்கு உருண்டு போய் கொண்டு இருக்கிறேன்" என்றாள்.
மீண்டும் முகர்ந்து பார்த்த கரடி, "சரி பூசணிக்காயே, போய் வா" என்று உருட்டி விட்டது.
பூசணிக்காய் உருண்டு போனது, இந்த முறை ஓநாய் பூசணிக்காயை தடுத்து நிறுத்தியது.
கரடி "என்ன இது, பார்க்க பூசணிக்காய் மாதிரி இருக்குது, ஆனால் பாட்டியம்மாவின் வாசம் வருகிறதே" என்று சொன்னது.
பூசணிக்காய் உள்ளே இருந்த பாட்டி, "இல்லை இல்லை, நான் பூசணிக்காய்தான், வீட்டுக்கு உருண்டு போய் கொண்டு இருக்கிறேன்" என்றாள்.
ஆனால் ஓநாய் நம்பவில்லை. பாட்டியம்மாவின் வாசம் வருவதால் பூசணிக்காய் தோலை, ஓநாய் தன் கூரிய நகத்தால் கிழித்து எடுத்தது, இதை கண்ட பாட்டியம்மா, வேகமாக பூசணிக்காயில் இருந்து வெளியே வந்து, தன் கைத்தடியால் ஓநாயின் முகத்தில் ஓங்கி அடித்தாள். அடி பட்ட ஓநாய், "ஊ ஊ.." என்று ஊளையிட்டு ஓடியது. பாட்டியும் வேகமாய் நடந்து சில அடி தூரத்தில் இருந்த தன் வீட்டை அடைந்தாள்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home