கலைஞர் வசனம். சேரன் செங்குட்டுவன் நாடகம்: ராஜாராணி திரைப்படம்: சிவாஜி நடிப்பு: புறநானூற்று புறக்காட்சி.
கெடுக சிந்தை ; கடிதுஇவள் துணிவே;
மூதின் மகளிர் ஆதல் தகுமே;
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை,
யானை எறிந்து, களத்துஒழிந் தன்னே;
நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன்,
பெருநிரை விலக்கி, ஆண்டுப்பட் டனனே;
இன்றும் செருப்பறை கேட்டு, விருப்புற்று மயங்கி,
வேல்கைக் கொடுத்து, வெளிதுவிரித்து உடீஇப்,
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி,
ஒருமகன் அல்லது இல்லோள்,
‘செருமுக நோக்கிச் செல்க’ என’ விடுமே!
பாடியவர்: ஒக்கூர் மாசாத்தியார்
திணை: வாகை துறை: மூதின் முல்லை
https://www.youtube.com/watch?v=vAE6xvRMn34
வேண்மாள்: சுவையான கதை ஒன்று சொல்லுங்கள் அத்தான்
சேரன்: சொல்லட்டுமா? சோழன் மகளை சேரன் மணந்தான். சேரனுக்கோர் செல்வன் பிறந்தான். அந்த செல்வண் இந்தச் சிலையை மணந்தான்;
வேண்மாள்: 'தெரிந்த கதைதானே இது'
சேரன்: நடந்த கதை கூட
வேண்மாள்: நடக்காத கதை ஒன்று சொல்லுங்கள் அத்தான்
சேரன்: சுவைக்காது கண்ணே அது.
வேண்மாள்: ஆங்.. காதல் கதை ஒன்று
சேரன்: ஹூஹூம். இதோ புறநானூற்றில்..
வேண்மாள்: போதும். வீரக் கதை தானே?
சேரன்: வீரத்தை மணந்த காதல் கதை!
தந்தையையும் கணவனையும் போரிலே பலி கொடுத்த பெண் ஒருத்தி, தன் மகனையும் போருக்கு அனுப்பிய புறக் காட்சி வேண்மாள்!
கொஞ்சம் கேளேன்; நானே எழுதி இருக்கிறேன் புதிய நடையில்.
காவிரி தந்த தமிழகத்து புது மணலில் களமமைத்த சேர சோழ பாண்டி மன்னர், கோபுரத்து கலசத்தில் யார் கொடிதான் பறப்பதென்று இன்று போல் போர் தொடுத்து கொண்டிருந்த காலமது.
அந்நாளில் போர் களத்தில், தாய்நாடு காக்க தாவி பாய்ந்து செத்தார் தந்தை என்ற சேதி கேட்டு, தனல் மேல் மெழுகானாள் தமிழகத்து கிளி ஒருத்தி.
அனல் போலும் கண்ணுடைய அயலூர் சென்றிருந்த அவள் கணவன் வந்திட்டான்.
புனல் போக்கும் விழியாலே அவள் போர் செய்தி தந்திட்டாள்.
தந்தை களம் பட்ட செய்திக்கோ தவித்தாய்? என்றான்.
இல்லை அன்பா! முல்லை சூழ் இந்நாட்டு படைக்கோர் வீரர் குறைந்திட்டால், நல்ல உடையில் ஓர் கிழிசல் வந்தது போலன்றோ? இனி தடையின்றி நுழைவரே பகைவர் என எண்ணினேன்.
அடைபட்ட கண்ணீர் அணை உடைத்தது அத்தான் என்றாள்.
அவன் குகை விட்டு கிளம்பும் ஒரு புலியென, புகை விட்டு குமுறும் எரிமலையென, பகை வெட்டி சாய்க்கும் வாள் எடுத்தான்.
சூழ் உரைத்தான். சுடர் முகம் தூக்கினான்.
சுக்கு நூறுதான் சூழ்ந்து வரும் படை என்றான்.
நாடு மீட்காமல் வீடு திரும்பேன் என்றான்.
நங்கையோ நகை முழக்கம் செய்து நடந்திடுக கண்ணே! என்றாள்.
திருப்பி வருவேனோ இல்லையோ, எதற்கும் இப்போதே ஒரு முத்தம்.
இந்தா திரும்பு என்றான்.
கொடுத்தான்.
பின் தொடுத்தான் பகைவர் மீது பாணம்.
போர் போர் போர் எனவே முழங்கிற்று முரச ஒலி.
பார் பார் பார் அந்த பைங்கிளியின் உரிமையாளன் பகைவர் மீது பாய்ந்து கொல்லும் வீரம் பார் என்று பட்டாளத்து தோழர் எல்லாம் வியந்துரைத்தார்.
அந்த கட்டாணி முத்தாளும் கண் வழியே சிரித்திட்டாள், களத்தினிலே அத்தானுக்கு அடுக்கடுகாய் குவிந்து வரும் வெற்றிகளை கேட்டு விட்டு.
கோட்டைகள் விடு பட்டன.
எதிரியின் குதிரை கால்கள் உடை பட்டன.
வேழ படை முறிபட்டது.
வேல்கள் பொடி பட்டன.
என் கொற்றவன் படைகள் கொட்டும் பேரிகை கோடை இடியென கேட்குது கேட்குது என குதித்திட்டள்.
புது பண் அமைத்திட்டாள்.
வீரர்கள் வந்தனர்.
வெற்றி உன் கணவனுக்கே என்றனர்.
வேந்தனின் தூதுவர் வந்தனர்.
வாழ்த்துகள் வழங்கினர்.
வீட்டோரத்து தோழிகள் வந்தனர்.
வெற்றி நீட்டோலை வாசித்து மகிழ்ந்தனர்.
அந்த அழகி ஆனந்த கண்ணீர் பொழிந்தாள்.
அப்போது ஏன் அந்த மனிதன் வந்தானோ? இழவு செய்தி சொல்வதற்கு.
என் அருமை பெண் பாவாய்.
கண்ணல்ல கலங்காதே.
களச் செய்தி கடைசி செய்தி கேள் என்றான்.
அந்தோ! மாவிலை தோரணம் கட்டி, மண விழா மேடை தன்னில் வாழ்விலே ஒன்றானோம் என்று சொன்ன கண்ணாளன் மார்பிலே வேல் தாங்கி, நல்ல சாவிலே வீழ்ந்து விட்டான்.
ஆவிதான் போன பின்னும் உயிர் வாழும் ஆரணங்கு, அச்சடித்த தமிழ் பதுமை கூவி அழுதாள்.
கொத்தான மலர் அந்த குடும்பம்.
அதை கொத்தாமல் கொத்திவிட்ட கொடுஞ்சாவை பழித்தாள்.
இழித்துரைத்தாள்.
இனி என்ன மிச்சம் என்றும், கனி அழுகி போனதென்றும் கதறி அழுதாள்.
பனி வெல்லும் விழி காட்டி, பனை வெல்ல மொழியுரைத்து, பள்ளியறை கவி பாடும் நாளெல்லாம் மண் தானோ?
இனி இது தூங்காத கண் தானோ? என அழுதாள் அத்தானின் பிணம் கிடக்கும் களம் நோக்கி தொழுதாள்.
சோகத்தால் வீழ்ந்து விட்ட அவள் காதில், வெற்றி வேகத்தால் பகைவர் தட்டும் போர் முரசம் பட்டதுதான் தாமதம்.
கெட்டதுதான் கெட்டது நம் குடி. முழுவதுமே பட்டொழிந்து போகட்டும் என எழுந்தாள்.
மட்டில்லா புகழ் கொண்ட நாட்டுக்கே அன்றி வீட்டுக்கோ வாழ்வேன்? என்றாள்.
வட்டிலினால் நாள் பார்க்கும் விதம் கொண்ட தமிழ் நாட்டு மாதரசி, தொட்டிலிலே இட்டு தான் வளர்த்த தூய செல்வன், அட்டி இன்றி கல்வி கற்க ஆலமரத்தடி ஆசானிடம் சென்றிருக்கும் நினைவு கொண்டாள்.
அங்கு சென்றாள். அம்மா என்று பாய்ந்தான் அழகுமிகு மழலை மொழி அன்பு தங்கம்.
அப்பா, தாத்தா ஊர் திரும்பினாரோ என்றான்.
திரும்பி வந்து சாவூர் சென்று விட்டார்.
கரும்பே நீயும் வா என அழைத்தாள்.
என்ன வாங்கி வந்தார் என்றான்.
மானம்! மானம்! அழியாத மானம் என்றாள்.
மகனே அதை சுவைக்க நீயும் வருக என்றாள்.
வந்து விட்டான் குல கொழுந்து.
குடும்ப விளக்கு எரிந்து கொண்டே கூறுகின்றாள்.
எதிரிகளின் படை எடுப்பால் நம் குடும்பம், தலை உதிர்த்து விட்ட மரமாகி போனதடா தம்பி,
கவலை இல்லை.
களம் சென்றார்.
மாண்டார்.
ஆனால், இந்த நிலம் உள்ள வரையில் மானம் காத்தார் என்ற பெயர் கொண்டார்.
மகனே நீயும் உன் தோளிலே பலம் உள்ள வரையில் பகையை சாடு.
பரணி பாடு.
இது உன் தாய் திருநாடு.
உடனே ஓடு என தாவி அணைத்து தளிர் மகன் தன்னை, சீவி முடித்து சிங்காரித்து, ரத்த காவி படிந்த வாள் கொடுத்து, சென்று வா மகனே செறு முனை நோக்கி என வாழ்த்தி விட்ட திருவிடத்து காட்சி தன்னை போற்றி பாடாதார் உண்டோ திருமகளே இப் பூ உலகில்?
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home